Powered By Blogger

Friday, September 30, 2011

காய்கறி இட்லி


தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
ரவா - 1 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
காரட் - 1
பசளிக்கீரை - சிறிது (வேறு வகைக் கீரையையும் சேர்க்கலாம்)
பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்

காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கீரையையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு விழுது, ரவா, நறுக்கிய காய், கீரை, பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும். தேவைபட்டால் சிறிது தயிர் அல்லது தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும். இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வைத்து வேக விடவும்.

வண்ணமயமான, சத்துள்ள இட்லி தயார்.

குறிப்பு: இட்லி மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம். சிறிது சோடா உப்பைச் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

சோளச்சுண்டல்


தேவையானப்பொருட்கள்:

சோளக்கதிர் - 2
காரட் - 1
தக்காளி - 1
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

சோளக்கதிரை, இரண்டாக வெட்டி, குக்கரில் போட்டு சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். வெந்த சோளக்கதிர் சற்று ஆறியவுடன், அதிலிருந்து சோள முத்துக்களைத் தனியாக உதிர்த்தெடுக்கவும்.

பச்சைமிளகாயை, நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் நீளவாக்கில் கிள்ளி வைக்கவும். தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். மேல் தோலும் சதையும் உள்ள பகுதியை மட்டும் உபகோகிக்கவும். விதை, மற்றும் சாற்றை நீக்கி விடவும். (செர்ரி தக்காளி கிடைத்தால் அதை அப்படியே உபயோகிக்கலாம்).

ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள் சேர்த்து சிவக்க வறுக்கவும். கீறி வைத்துள்ள பச்ச மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து சற்று வதக்கி, காரட் துருவலைச் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள சோள முத்துக்களைப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கும் முன் தக்காளித்துண்டுகள், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.

சிறிது மாங்காய்த்துருவல், கொத்துமல்லித்தழை ஆகியவற்றைத் தூவி பரிமாறலாம்.

கடலைப்பருப்பு சுண்டல்


தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கடலைப்பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் தேவையான தண்ணீரையும், உப்பையும் சேர்த்து ஓரிரு விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். பருப்பு நன்றாக வேக வேண்டும். ஆனால் குழைந்து விடக்கூடாது. திறந்த பாத்திரத்திலும் வேக வைத்தெடுக்கலாம். வெந்த பருப்பிலிருந்து நீரை ஒட்ட வடித்து விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன் அதில் பெருங்காயத்தூள், மிளகாய் (சிறு துண்டுகளாக நறுக்கி போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, அத்துடன் வேகவைத்தப் பருப்பையும், ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.

கொண்டைக்கடலை சுண்டல்


கொண்டைக்கடலையை 7 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைக்கவும்.

வேகவைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

1 கப் கடலைக்கு - 3 அல்லது 4 மிளகாய் (காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்), 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கறிவேப்பிலை கொத்து, 1 டீஸ்பூன் எண்ணை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், தேவை.

வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்தவுடன், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயை கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு உடனே வெந்தக் கடலையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி உடனே இறக்கவும்.

பல தானியச் சுண்டல்


நவ தானியயங்கள் என்று கூறப்படும் கோதுமை, நெல் (அரிசி), துவரை (துவரம் பருப்பு), பச்சை பயறு (பயத்தம் பருப்பு), கொண்டைக்கடலை, மொச்சைக்கொட்டை, எள்ளு, கொள்ளு, உளுந்து (உளுத்தம் பருப்பு) ஆகியவற்றைக் கலநது செய்யப்படும் சுண்டல் நவதானியச் சுண்டல். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தானியம் உகந்தது. அதனால், நவராத்திரியின் பொழுது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியத்தை உபயோகித்து சுண்டல் செய்து, நவகிரகங்களையும் சாந்தி படுத்துவது வழக்கம் (நவக்கிரகம் சாந்தி அடைகிறதோ, இல்லையோ, தினம் ஒரு வகை தானியம் உண்பதால், நமக்கு சத்து மிகுந்த உணவும், அதனால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது). மேற்கண்ட தானியங்கள் இருப்பில் இல்லாத பொழுது, இருக்கும் ஏதாவது ஒன்பது வகை பயிறு அல்லது பருப்பு கலந்து சுண்டல் செய்வதும் "நவ தானியச் சுண்டல்" என்று அழைக்கப்பட்டது. நவதானியத்தில் ஒன்றிரண்டு குறைந்தாலோ அல்லது கூடினாலோ, அதை வைத்து செய்யும் சுண்டல் "பல தானியச் சுண்டல்". இதில் விருப்பமான அல்லது இருப்பில் உள்ள அனைத்து தானியங்களையும் உபயோகிக்கலாம்.

என் அடுப்பங்கரையில் இருந்தவை:

கொண்டைக்கடலை, காய்ந்த பட்டாணி, மொச்சைக்கொட்டை, காராமணி, கொள்ளு, பச்சைப்பயிறு - ஒவ்வொன்றும் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை - எல்லா தானியங்களும் சேர்ந்து 2 கப்

காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சைப்பயிறை தனியாகவும், மற்ற தானியங்களை ஒன்றாகவும் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய தானியங்களை கழுவி சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து குக்கரில் போட்டு 2 அல்லது 3விசில் வரும் வரை வேக வைத்து, வடிகட்டி வைக்கவும்.

பச்சைப்பயிறை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து குழையாமல் வேக வைத்து வடித்தெடுக்கவும். குக்கரில் போட்டால் ஒரு விசில் போதுமானது.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாயைக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, பின்னர் அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள தானியங்களைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கிளறி விடவும். இறக்கி வைக்கும் முன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கி வைக்கவும்.

முளைக்கட்டிய பயறு


பச்சை பயறு புரோட்டின் சத்து மிகுந்தது. அதை அப்படியே உபயோகிப்பதை விட, முளைக்கட்டி உபயோகித்தால் அதிக பலன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை கிடையாது. எளிதில் சீரணமும் ஆகும்.

ஒரு கப் பச்சை பயிறை தண்ணீரில் குறைந்தது 12 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி களைந்து எடுத்து, ஒரு மெல்லிய வெள்ளைத்துணியில் போட்டு, சிறு மூட்டை போல் முடிந்து, சற்று உயரமான இடத்தில் கட்டி மீண்டும் ஒரு 12 மணி நேரம் தொங்க விடவும். பின்னர் மூட்டையை அவிழ்த்துப் பார்த்தால் பயறு நன்றாக முளை விட்டிருக்கும். (குளிர் பிரதேசங்களில், பயறு முளை விட அதிக நேரமாகும். அந்த இடங்களில் வசிப்பவர்கள், மூடடையின் மேல் அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து விட்டு, மேலும் 10 அல்லது 12 மணி நேரம் வைத்திருக்கவும். அல்லது அந்த மூட்டையை, ஒரு பாத்திரத்திக்குள் வைத்து, மூடாமல் வைத்திருந்தாலும், முளை விடும்).

சென்னை போன்ற இடங்களில், முளைப்பயறு கடைகளிலேயே கிடைக்கிறது.

முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாக, சாலட், பச்சடி ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், இட்லி தட்டில் போட்டு, ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து உபயோகிக்கலாம். மைக்ரோ அவனில் வேக வைத்து எடுக்கலாம்.

வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றில் சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்த உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

எளிமையான சுண்டல் குறிப்பு:

தேவையானப்பொருட்கள்:

முளைக்கட்டிய பயறு - 1 கப் (வேக வைத்தது)
மிளகாய் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளி போடவும்), பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வறுத்து, அத்துடன் பயறு, உப்பு போட்டுக் கிளறி விடவும் கடைசியில் எலுமிச்சம் சாறு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்


சென்னைவாசிகளும், சென்னைக்கு வருகை புரிந்தவர்களும் மெரினா கடற்கரையைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மெரினா எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு பிரசித்தம் இங்கு விற்கப்படும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். மாலை வேளையில், கடற்கரை மணலில் அமர்ந்துக் கொண்டு, சுண்டல் சாப்பிடும் சுகமே அலாதிதான். கடற்கரையைப் பிரிந்து வாழும் அன்பர்கள், சுண்டலையாவது சுவைத்து மகிழுங்கள்.

தேவையானப்பொருட்கள்:

காய்ந்த வெள்ளைப் பட்டாணி - 1 கப்

அரைக்க:

பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அலங்கரிக்க:

பச்சை மாங்காய் - துருவியது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பட்டாணியைக் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் போட்டு, பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் சிறிது உப்பையும் போட்டு, 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் சற்று ஆறியவுடன், திறந்து, பட்டாணியை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் (மிளகாயைக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெந்தப் பட்டாணியைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே இறக்கி வைக்கவும். (அடுப்பில் அதிக நேரம் வைக்கக் கூடாது. அதிக நேரம் வைத்துக் கிளறினால், பட்டாணி அழுத்தமாகி விடும்).

பின்னர் அதன் மேல் தேங்காய், மாங்காய் துண்டுகளைத் தூவி விடவும்.