Powered By Blogger

Friday, September 30, 2011

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்


சென்னைவாசிகளும், சென்னைக்கு வருகை புரிந்தவர்களும் மெரினா கடற்கரையைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மெரினா எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு பிரசித்தம் இங்கு விற்கப்படும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். மாலை வேளையில், கடற்கரை மணலில் அமர்ந்துக் கொண்டு, சுண்டல் சாப்பிடும் சுகமே அலாதிதான். கடற்கரையைப் பிரிந்து வாழும் அன்பர்கள், சுண்டலையாவது சுவைத்து மகிழுங்கள்.

தேவையானப்பொருட்கள்:

காய்ந்த வெள்ளைப் பட்டாணி - 1 கப்

அரைக்க:

பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அலங்கரிக்க:

பச்சை மாங்காய் - துருவியது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - பொடியாக நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பட்டாணியைக் குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் போட்டு, பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் சிறிது உப்பையும் போட்டு, 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் சற்று ஆறியவுடன், திறந்து, பட்டாணியை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் (மிளகாயைக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின் வெந்தப் பட்டாணியைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே இறக்கி வைக்கவும். (அடுப்பில் அதிக நேரம் வைக்கக் கூடாது. அதிக நேரம் வைத்துக் கிளறினால், பட்டாணி அழுத்தமாகி விடும்).

பின்னர் அதன் மேல் தேங்காய், மாங்காய் துண்டுகளைத் தூவி விடவும்.

No comments:

Post a Comment